
தொப்பலாய்
நனைந்து கொண்டிருக்க
பதரியடித்து
என்
இரு கைகளை
குவித்து
குடை பிடிப்பதை கண்டு
உலுக்கி, உலுக்கி
சிரித்து விட்டு
”யாரோ ஒருவராவது
நனையாமல்
இருக்கலாம் என்று
தன்னடியில்
என்னை அழைத்தது
மழையில்
நனைந்து கொண்டிருந்த
சாலையோர
மரம்.

எனக்கும்,
உனக்குமான
நெருக்கத்தை தொகுத்து
உரக்கச் சொல்கிறேன்
என்
தனிமையிடம்;
கேட்டு, கேட்டு
கேலி செய்தும்.
உனைப் போல
அடிக்கடி
முகம் பொத்தியும்
தன்
ஞாபகங்களை
புதுப்பிக்கிறது;
சலிப்பு தட்டினாலும்
சாமர்தியமாக
“உம்”
கொட்டுவதை மட்டும்
உறக்கத்திலும்
கற்றுக் கொண்டது
இப்படியான
எங்கள்
சரசங்களை கண்டு
அக்கம், பக்கமெல்லாம்
கசிகிறது
கிறுக்கு, பைத்தியமென
கிசு, கிசுப்பு...

ஆவாரம்,
வெள்ள பூலா பூவோடு,
வேப்பிலையையும்
சேத்து
சொருவிய
கொண்டயோடும்
ஊம முரச
ஒரக்க கொட்டுரா...
“உள்ள யாரும்
நுளையாம
கதவாவும்,
வெளிய நா
போகாம
வெலங்காவும்
காதல் நோம்பிக்கு
காப்புகட்டியத...

உன்
கனவுக்குள்
உலவவே
என்
கனவுகளை
தொலைக்கிறேன்...
தினம், தினம்
உன்
கனவில்
நான்
வந்ததை
கதை, கதையாய்
சொல்கிறாய்
இடை, இடையே
சில
தணிக்கை செய்த
மௌனங்கலோடு.
இடைமறித்து
கேட்டேவிட்டேன்
“ஏன்
எனக்கு மட்டும்
கனவே
வருவதில்லை” என்று?!
கண்கள் நிமிர்ந்து
கள்ள சிரிப்பை
கசக்கி எரிந்தாய்
எடுத்து பிரித்து
வாசித்தேன்
“தினமும்
என்
கனவுக்குள்
தவறாமல்
வந்துவிடும்
உனக்கு எப்படி
தனியாக
கனவு வரும்”
உன்
கனவுக்குள்
உலவவே
என்
கனவுகளை
தொலைக்கிறேன்...

வாய்க்குள்
காற்றை அடைத்து
கன்னம் பெறுக்க
கையால்
குத்தி உடைக்கும்
காற்றில்
தெரித்து விழுந்து விட்டது
உனக்கு தெரியாமலே
என்
காதல்
எச்சில் குமிழிடையே!

வெரும்
குச்சியை மட்டும்
கையில் வைத்திருக்க
உருகி, உருகி
உன்
காலடியில்
இதயம்
தேங்கி நிற்கிறது
அதை
கால் விரல்களால்
தொட்டு, தொட்டு
விளையாடுகிறாய்
அதுவரை
பாதரசமாய்
உருண்டிருந்தவை
பாதம் பட்டதும்
பஞ்சை பற்றி
பதுங்கி கொள்ளும்
நீர்துளியானது
நீ
விசிறி வீசி
எரிந்து பார்க்கிறாய்
பிழிஞ்சு உதரி
உலர்த்தப் பார்க்கிறாய்
ஆனால்
உடும்பாய் தொற்றி
இறுக்கிக் கொண்டது;
மிச்ச மீதி
துளிகளை
விட்டு வைக்க கூடாதென்று
மக்கிப்போன
என்
தயக்க கடிதங்களை
நசுக்கி, உடைத்து
தூளாக்கி
துளிகளோடு சேர்த்து
கூளாக்கி
கசக்கி, பிசைந்து
பூசி மொழுகி அடைக்கிறாய்
நான்
உள்ளே நுளைந்து
உக்கார்ந்து விடுவேன்
என்று
உன்
இதய வாசலை...

சொட்டு, சொட்டாய்
முத்தம் வழிகிறது
அதை
உன்
உதடுகளில்
ஏந்தி உருஞ்சுகிறாய்
கடைசி துளிவரை;
மேற்புற வெடிப்புகளின்
இடையினில்
நீ
விட்டு சென்ற
ஈரம் குடித்து
துளிர்க்கிறது
மீண்டும்
என்
மீசை.

பார்வை இல்லாதவரும்,
பேச இயலாதவரும்
சந்திக்கையில்
பேச்சும்,
சைகையுமாய்
நானிருப்பது போல
தூது போகிறேன்...
”நன்பன் காதலை
நன்றாய் வளர்த்தால்
தன் காதல்
தானாய் வளருமாம் ”

முந்தானையில்
முகம் துடைச்ச
கரிசனத்தில்
என் அன்னைக்கு
உயிர் கொடுத்தேன்
உன்
வடிவில்

நீ
கை துடைத்த
ஈரம் பட்டு
என்னாடை
மண்ணாடையாகி
களையெடுப்புக்கு
காத்திருக்கிறதே!?

பனை ஓலை
கோட்டை கட்ட...
அதை சுற்றி
படலு வேய...
இடை,இடையே
தென்னை ஓலை
தட்டி வைக்க...
முக்கால்வாசி
தோட்டமெல்லாம்
பழநிமலை
கூட்டமாக
உச்சி காய்ஞ்சு
நின்றிருக்க...
ஆமணக்கு செடியோட
அம்மணத்த
மறைக்க பார்த்த
புளிய எலை
பொழப்பாகிவிடடது...
ஓலை பத்தாம
கூரை
கொண்டையம்
குறையா நிற்க...
கரும்புச் சோவையால
இரும்பு போர்வையாய்
இருக்கி வேய்ஞ்ச
சீமை வீடு

பன்னாடையில்
வடிகட்டிய
பணமரத்து கள் போல
நீ
வாசல் தெளிக்கும்
சாணி தண்ணி பட்டு
தள்ளாடி
கிடக்கிறேன்
கோலமாக
அலங்கோலமாக

செங்கல்
பதியத்துல
தேங்கி நிக்கும்
மண் குழம்பா
உருகுழைஞ்சு
கலந்திடுவோம்
ஒரு சேர
வாழ்ந்திடுவோம்

கட்ட மூக்கு
சிட்டு ரண்டு
கம்பந்தட்டு
காட்டச் சுத்தி
வாலாட்டி, வாலாட்டி
வலம் வருதே
புள்ளி வண்டு
தலை வச்சு,
காலர் இல்லா
சட்டைப் போட்டு
நீளக் கொலா
பேண்ட்டு மாட்டி
புதுசா வந்திருந்த
பூச்சாண்டி
காவல்காரனை கண்டு!?

சற்று தனிந்திருந்த
காற்று தனித்திருக்கும்
ஓர் கும்மிருட்டு
மௌன நாளம்
விம்மி பெருத்து
நா வெடித்து
வீழும் துளிகளுக்கு
விரிவுரை
நிகழ்வாய்...
இனிப்பு, காரம்
எதிரெதிர் அமர்வில்
தேநீர் குவழைக்குள்
எச்சில் தெரிக்கும்
வழக்க பதிலகள்
விலாசி செல்லும்...
விசனம்
பற்றிய
முதிர் கன்னியின்
போர்வை!
இருள்!...

பாம்பு சட்டையை
பல்லிடுக்கில் சேர்த்து
வைக்கோலோடு
விழுங்கிய
பசு மாட்டு
கழிசலாட்டம்
கம்பந்தட்டு வேய்ந்த
கூரை பொத்தல்களில்
அடை மழை

தறிக் கையிடையே
தடமாறிய
நாடா தெரித்து
பொற ஓட்டம் போன
துணியாக
நானிருக்கிறேன்
உன்
ஒற்றை முடியை
உயிரில் கோர்த்து
என்னோடு
என்னை
தைப்பதற்காக...!

பருவ பெண்ணாக
உருவம் மாறி
என்னெதிரில்
நீ வர
பறியை மறந்த
ஏற்றம் போல
தரி கெட்டு
வழியுது
என்
வாய்க்கால்கள்

தென்னஞ் சோவையில்
பீ...ப்...பீப்...பண்ணும்
சின்னஞ்சிறு
காலம் போல
தன்னை மறந்து
குடையை துரந்து
என்
விரல் பற்றி
நீ
நனைந்தாடிய
மழை காலம்

பால் தடம்
வரைந்து
களைத்து போய்
என்
அறை மூலையில்
இளைப்பறிக்கொண்டு
எனை கண்டு
தலை தூக்கி
‘மியாவ்’ சொன்ன
கண்ணன் (எ) பூனை;

சுவற்றுப் பல்லிக்கும்
எனக்கும்
சின்ன
ஒப்பந்தமடி
என்
அருகில்
வந்ததும்
உன்
மேலே விழுந்து
பயம் காட்டிட...!

என்
அறை
சுவற்றுப் பல்லிக்கு
சகுனம் சரியில்லை
நான்
மென்று கொண்டிருக்கும்
சுவிங்க சத்தத்தினால்
அது
பஞ்சாங்கம்
புரட்டுகிறது
*
ஒரு
முறை கூட
வெட்டுப் படாத
தன்
வாலை நீட்டி
வானம் தொட்ட
வன்முயற்சியால்
உடல் தவறி
தலை குப்புற
என்
வல தோலில்
விழ
பஞ்சாங்கம்
புரட்டுகிறது
சுவற்றுப் பல்லி
*
திரைப்பட
வில்லனிடம்
சிக்கிக் கொண்ட
கதாநாயகியால்
என்
அக்கா
உதட்டின்
அனுதாப சத்தம் கேட்டு
விழித்துக் கொள்ளும்
எங்கள்
வீட்டு
சுவற்றுப் பல்லி

இரட்ட சடையை
சுத்தி பின்னிய
துணி பூவை
பார்த்து
வெள்ளாவி
உடை எல்லாம்
வரி வரியா
கிழிஞ்சு தவிக்குது!

பிஞ்சு சோளத்தட்டை
பிடிச்சிழுத்து
வெட்டி வச்ச
விறக சுத்தி
கட்டுப் போட்ட
உன்
கை விரலை கண்டு
முத்திப் போன
சோளத் தட்டெல்லாம்
தலை சுத்தி
விழுந்து கிடக்கு
கயிறப் போல!

அடை மழை
விசை மங்கி
வழிந்து நழுவும்
சிணுங்கல் தொடர...
குடை விரட்டா
காற்று கசிந்திட...
உடையை ஊடுறுவி
குளிர் குத்த...
பல்லிடை
தட்டச்சு பலகும்...
பருவம் பிசகி,
உருவம் மாறா
கரையை தேடும்
புயல் சின்னம்

கார முள்ளில்
கீரி விட்டு
புங்க மர
கிளை மேலே
புதுசா
பதிய வச்ச
உன்
பெயரையும்,
என்
பெயரையும்
ஒரு சேர
பாக்கையிலே
பொதுவுடைமையை
கைப்பற்றிய
உழைக்கும்
வர்க்கம் போலானேன்

குற்றம்
என்ன செய்தோனோ?!
குஞ்சம் வச்ச
சவுக்கால்
வெலுத்து விட்டு
போகிறாய்
பின்னால் சடையை
பின்னி வீசும்
தொணியில்...

வாய்ப் பெட்டி
போட்ட
உழவு மாடாய்...
உன்
எதிரில்
என்
உலரலும் கூட
உள்வாங்கி கொள்கிறதே!

உள்ளங்கையாக
நானிருக்க...
புறங்கையான
உன்னைப் போல
நான் மாற
ஆரிய முலாமெல்லாம்
அழிந்து உருக
சூரிய வெப்பத்தில்
குச்சி ஐஸ் போல
நின்றிருக்கேன்!

மௌனத்திற்கு
மனு செய்யும்
நிசப்தவெளியில்
ஒளிக்கற்றைகள்
தென்னங்கீற்றிடையில்
சாறு போல
சருக்கி வர
ஈர சருகினில்
மென்மை உரசலும்
மேலோங்கி நிற்க...
இரத்த
சுத்திகரிப்பின்
சத்தம் கூட்ட
அஃறினைகள்
எல்லாம்
மௌனிகளாய்...
வேற்று கிரக
வேதனை செய்யும்
ஒற்றை பாதை
பயண இருள்

உன்னை
தொட துணிய
நாணத்தின்
’இடையில்’
நத்தையாகிறதே
என்
வேகம்

உன்
இமைகளுக்கு
ஏனடி தண்டனை
தருகிறாய்
எனை
கண்டால்
தோப்புக்கரணம்
போடுகிறதே!

கட்டெறும்பு வாய்
சீனி போல
கடத்தி
வரப் பார்க்கிறேன்
உன்
உதட்டோர
திஷ்டிப் பொட்டை

உச்சி வெய்யில்
நேரத்துல
வெட்ட வெளி
பொட்டலலிலே
வெற்றுடம்பாய்
படுத்திருப்பேன்
நீ
அலசி எடுத்து
தாவணிய
வீசி உதறும்
சாரலுக்காக!

கருவேல
முள்ளு போல
உன்
கண் இமைகள்
சிமிட்டி, சிமிட்டி
சிக்க வச்சு
சேட்டை செய்கிறதே!

வார்த்தைகளும்,
மொழியும்
வாய்ப் பேசாதிருப்பினும்
உன்
இமை
சப்தங்களால்
மௌனம்
பழுதாகிவிட்டது

சிட்டு குருவியின்
நுனி மூக்காய்
உன்
விரல்கள்
வெண் முத்து சோளத்தை
விழுங்காமல்
விதைக்கிறதே
வாசல் வயலில்..

வெள்ளாட்டு
காம்புல
கல்லாட்டம்
பால் பீச்சி
மல்லாட்டி
மொழி பாடி
என்
கண்ணோரம்
கல்லுப் பட்டு
கன்னிப்போன
வீக்கம் மேல
விரலாலே
நீவி விட்டு
வசியம் செஞ்சு
போவாயே!

காட வெரட்டும்
சாக்கில் நீ
கட பார்வையில்
என்ன பாக்க
ஓட முழுதும்
ஓடியாடி
காடையோட
என்
மனசும்
கலைஞ்சு போய்
விக்குதே!?

ஒல கொதிச்ச
தட்ட தூக்கி
சுட்டுக் கொண்ட
உன்
விரலப் பார்த்து
உரம் போட்ட
வயலப் போல
உருகுழைஞ்சு போனேனே!

சன்னல் கம்பிகளுக்கு
கண்ணிருந்தால்
சைகையை எல்லாம்
மொழிப் பெயர்ந்து
முன்னுரையையும்
என்னுரையையும்
உன்னிடமே
வாங்கி இருக்கும்

விதை விழாத
விலை நிலம் போல
நீ
இல்லாத
என்
வீட்டு சன்னல் கம்பிகள்
கதை பேச
சைகை இல்லாமல்
சதை இழந்த
உடலாகி
சாகக் கிடக்கிறது

சாலையோரம்
விழுந்துக் கிடக்கும்
பூக்களை மித்தித்து விடாமல்
தத்தி தாவி போகிறாய்
ஏக்க பெருமுச்சு விட்டு
எல்லா பூக்களும்
வாடுகின்றன
என்னைப்போலவே

வைக்கோல் கன்றுக்குட்டியாய்
உன்னை காட்டியே
கவிதை கறக்கிறேன்
என்னிலிருந்து

ஆத்து மேட்டு கல்லு மேல
அழுக்கு விரட்டும் சின்னவாழ
காத்தும் நீரும் ஒன்னாக
சோப்பும் நொறையும் பூவாகும்
காகிதம் விளைஞ்ச கரையோரம்
கழுத ரண்டு மேயிஞ்சு நிக்க
அழுத வானம் மூக்க சிந்த
பொழுது பார்த்து காத்திருக்கு
மொழங்கால் தண்ணில முங்கி நின்னு
அலசிப் போட்ட துணியெல்லாம்
கெலச்சி விட்ட மயிரப்போல
வெடச்சி நிக்குது கஞ்சிப்போட்டு
கெணத்து தண்ணில வேக வச்ச
சோத்து வண்ணம் போலிருக்கு
அடிச்சு துவைச்சு காயப்போட்ட
வெள்ள சட்ட, வேட்டியெல்லாம்
தெருவோரம் நிக்கும் தள்ளுவண்டி
தக தகத்த நெருப்பக் கொட்டி
தண்ணி தெளுச்சி தடவி விட்டு
இழுத்து அமுக்கி இஸ்திரி போட
வித விதமான ஆடை எடுத்து
வீட்டுக்குள்ள மட்டும் போட்டுக்கிற
அப்பிடி இப்படி திரும்பி நின்னு
கண்ணாடி கிட்ட கேட்டுக்கிற
சிவப்புகர வேட்டி ஒன்னு சின்னதொர வீட்டுக்கும்
பச்சகர வேட்டி ரண்டு படலுக்கார உறவுக்கும்
மயிலு முந்தான பொடாவ மூனு மடுவுக்கர வீட்டுக்கும்
எண்ணி பிரிச்சு கட்டி வைக்க
ஊரு அழுக்கெல்லாம் உனக்குத் தெரியும்
வெள்ளாவி வச்சு மறைக்க முடியும்
அழுக்கா போன உன் வாழவா
யாரு துவைக்க வருவாங்க

காதோரம் கெலஞ்ச முடி
கத கதையா பேசுதே
சுவரோர சேந்திருக்கும்
கவுலி சொல்லும் சகுனம் போல;
நீ எடுத்து முடியும் போது
இழுத்து சொருவுவ என்னையும் சேத்து
உச்சி கொண்ட மேலே ஒரு
பிச்சி பூவ நீயும் வைக்க
ஏர பூட்டி உழுதேனே
காரப் போட்ட வாசலெல்லாம்
ஊரு சனம் என்ன பாத்து
உச்சிக் கொட்டி கிசு கிசுத்ததே
பித்து பிடிச்சு அழையுரேனே
சத்துக் கேட்ட மனசாலே
நடவு நெடும் உன் வெரலுக்குள்
எறப்பும் ,பெறப்பையும் ஒளுச்சி வச்ச
சேத்துக்குள்ள உசுரக் கொஞ்சம்
சேத்து நடும் நேசக்காரி
நெடு நெடுன்னு வளந்து நிக்கும் பயிரெல்லாம்
நேத்திக்கடன் ஆடு போல கழுத்து சாய்ஞ்சு
காத்திருக்கே உன் வெரலாலே வெட்டுப்பட
பாக்கு வெத்தல மாத்தும் வர
போக்குக் காட்டி போறவளே
சாக்கு ஒன்னு கெடைச்சாலும்
உன்ன பாக்க மனம் ஏங்குதே
கெண்டைக்கால தொட்டு நிக்கும்
கர வச்ச கண்டாங்கி சேலையில
குறுக்கு மறுக்கா
கட்டம் போட்டு சுத்தி நிக்கும்
வண்ண வண்ண நூலப்போல
சின்ன சின்ன ஆசையெல்லாம்
வாழ எல குறுத்தப் போல
சுத்திக் கெடக்கு மனசுக்குள்ள
வெட்டி நீயும் எடுத்துப்போயி
வெரலாலே உசுர தெழுச்சி
காதல் சோறும் கவித கூட்டும்
பெசஞ்சி நீ திங்கையில
சோத்தோட என்ன சேத்து
விழுங்கும் உன் விரலுக்கடியில்
விரிஞ்சு கெடக்கேன்
தல வாழ எல போல

அடி கரும்பு ருசியபோல
படி சோறு நீயும் பொங்கி
பிடி கவளம் பெசஞ்சி தந்து
மடி மேல மயங்க வைக்கும்
அடி மனசுல என வச்சவளே
மாராப்பு சுந்தரியே
என வீராப்பு அத்தனையும்
உன் விரல் கோதும்
கேராப்பு கரிசத்தில்
கோல சுத்தின கொடியாட்டம்
கால சுத்திக் கெடக்குதே
உன் பனி வெடுப்பு பாதத்துல
கட்டி தங்கம் கொழைச்சு வச்சு
பட்டிப் பாத்து பூசுவேன்
ஒட்டி வச்ச ஓவியமே
மண் குவள இடுப்புல
என் கவலை தொங்குதே
ராவுக்க ஓரம் என்னதான்
கவுக்க பாத்த கருவாச்சி
சாவுக்க மர தோப்புக்குள்ள
சொகுசு பல உருவாச்சு
மவுசு கொறையா உன்னாலே
மனசு ரண்டும் ஒன்னாச்சு

வட்ட பொட்டு
சட்டப் போட்டு
கட்ட மாட்டு வண்டியோட்டி
கிட்ட,கிட்ட பேசி வரும்
ரட்ட மாடு போல
நாம
சேட்ட கீட்ட செஞ்சுருலமா?!ஆச மச்சான்
சேந்து நாம செல்வோம என் ஆச மச்சான்
சாட்டக் கையில் சொடக்குப் போட
ரோட்ட நியும் நொடியில் தாண்ட
பாத ஓரம் பாத்திருப்பேன்
சேனம் கட்டுன குதிரையாட்டம்
செல்வாய் நியோ கோட்ட போல
ரயிலு வண்டி தடம் போல
கைய கோர்த்து திரிவோமா
குயிலுகிட்ட தட்சணையா
அதன் குரலை வாங்கி வந்தேனே
வீட்டு ஓரம் மேட்டு மேல
வெதச்சிப்புட்டேன் சொற வேத
உன் மேனி மேலிருக்கும் மசுர எண்ணி
காணி நெலமெல்லாம் காஞ்சாலும்
தாகம் வந்து நா வறண்டாலும்
தண்ணி உத்த மறப்பேனா
கன்னி மனச கெடுத்தவனே
உன்ன எண்ணி நானும் ஏங்குறேன்

சாவதற்கு சத்தின்றி
வாழ்வதற்கு வக்கற்று
வட்டிக் கடைமுன்
வரிசையில் நிற்கும்
அடகு பாண்டமாய்
அன்றாடும்
உன்
எதிரில்
காதலோடு ....

காற்று வேலிக்கிடையே
சல்லடையிட்டு
இரட்டை சடை
பின்னலுக்கு முன்
பிசு,பிசுத்த
கூந்தலிடை காதிற்குள்
காற்று
கிசு,கிசுக்கிறது
வாயுவையும் வடிகட்டும்
என்
வலிகளை....