வருத்த எள்ளும்,
வாட்டிய முந்திரி,ஏலமும்,
கருப்பட்டியும்,
கசிஞ்சு வராதளவு
கச்சிதமா தண்ணீ சேத்து...
உரலுல உலக்கைய
உறக்க இடிச்சு
உருண்டை தட்டி தரும்
எள்ளுடிக்கு எப்பவுமே
பெட்டிகட்டிவிடும்
என்
ஆடிப்பெருக்கு விடுமுறை...



நடு உச்சி சூரியன் தன் முழு பலத்தையும் வெய்யிலாக வாட்டிக் கொண்டிருக்கிறது, வேலை யேதும் செய்யாமலே சோம்பேறி வியர்வை உடம்பில் வழியும் மதிய நேரம், தெருவை எட்டிப் பார்த்தால் காரவீட்டு தெருமுனை வளைவு வரை ஆள் நடமாட்டமே இல்லாமல் வெறுச்சோடிக்கிடக்கிறது. ரஞ்சிதம் மட்டும் மாட்டு கட்டுதறியில் ஏதோ முணு முணுத்துக் கொண்டே, ஈன்று மூன்று மாதமே ஆன கன்றுக்குட்டி வெய்யிலில் வெளியே துள்ளித் திரிகிறதென்று கயிற்றால் கட்டிப் போட்டுக்கொண்டிருக்கிறாள். பக்கத்தில் இருக்கும் தாய் பசுவோ கன்றை உற்றுப் பார்த்துக் கொண்டு தனக்கிட்ட வைக்கோலை அசைப் போட்டுக்கொண்டிருந்தது.
தூரத்தில் அடிக்கிற வெய்யிலுக்கு தலையில் துண்டை கட்டிக்கொண்டு கானலோடு வீடு நோக்கி நடந்து வந்து, வீட்டின் வெளி திண்ணையில் அமர்ந்து, ”உஸ்... அப்பா என்ன வெய்ய”... தன் தலையில் இருக்கும் துண்டை அவிழ்த்து காற்று வீசுகிறார் ரஞ்சிதத்தின் அப்பா. கட்டுதறி வேலையை விட்டுவிட்டு அப்பாவுக்கு குடிக்க தண்ணீர் தரும் போது ரஞ்சிதம் அப்பாவை பார்த்து ”என்னப்பா போன காரியம் முடிஞ்சுதா?” என்க, தண்ணீரை குடித்துவிட்டு, “முடிஞ்சதும்மா கொஞ்சம் வெய்ய தண்ணி இருந்தா ஊத்தி வைய்யு தண்ணியூத்திகிட்டு தாரமங்கலம் வரைக்கும் போய்ட்டு வரேன்”. என்று சட்டை பாக்கெட்டில் இருந்தவற்றை திண்ணை மேலே வைக்கிறார். ஒரு சில காகிதங்கள், இரண்டு பத்து ரூபாய், ஒரு ஐம்பது ரூபாய் தாள்களையும், நான்கைந்து சில்லறைகளையும் அதன் மேல் தன் செல்ஃபோனையும் வைத்துவிட்டு குளியலறை நோக்கி போகிறார்.
தென்னை ஓலையால் பின்னிக் கட்டிய குளியலறை பிரம்பு தட்டி கதவை திறந்து, அப்பா உள்ளே போய் சாத்தியதுமே, ரஞ்சிதம் வேகமாக குளியலறையை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே திண்ணை மேலிருந்த அப்பாவின் செல்ஃபோனை எடுத்து, ஃபோன் செய்கிறாள் ஈரோட்டில் இருக்கும் தன் மாமா மணிக்கு, ”நல்லா இருக்கியா? சாப்டியா…?”-வில் ஆரம்பித்து ”....ச்..சீ..போ மாமா” என்ற வெட்கத்தால் இவளோடு செல்ஃபோனும் சிவக்கிறது, இடையிடையே சில அப்புறங்களும் குறுக்கிட, இறுதியாக பிப்ரவரி 14 , காதலர் தினத்தில் என்ன நிற ஆடை அணியாலாம்-ல் வந்து நின்றது. அப்பாவின் குளியல்வரைதான் பேச முடியும் என்பதால், மனப்பாடம் செய்து ஆங்கிலம் ஒப்பிக்கும் தமிழ் வழி மாணவியாக பர பரத்தாள் ரஞ்சிதம். மாமா சொல்லும் வண்ண விளக்கங்களை உன்னிப்பாக கேட்டுக்கொண்டே ஒரு பக்கம் குளியலறை மீது கவனத்தை வைத்து பேசிக்கொண்டிருக்க.. இன்று இரவே ஊருக்கு வருவதாக மாமா சொல்லியதை கேட்டு சந்தோஷத்தில் குதுகலமடைந்துக் கொண்டிருக்கும் தருணம்,
குளியலறை கதவு திறக்கும் சத்தம் கேட்டு மாமானிடம் சொல்லியும், சொல்லாமலும் செல்ஃபோன் இணைப்பை துண்டித்துவிட்டு முன்பிருந்த அதே இடத்தில் ஃபோனை பதட்டதுடன் வைத்துவிட்டு கட்டுதறிக்கு சென்று தன் வேலையை தொடருகிறாள். மாதம் ஒரு முறைதான் ஊருக்கு வரும் மாமா, காதலர் தினமென்பதால் இரண்டாவது முறையாக வருவதை எண்ணி றெக்கை முளைத்த ஈசலாக..., துள்ளிக்குதிக்கிறாள். பயந்துகொண்டே போன கணக்கு தேர்வின் கேள்வி தாள் மிக சுலபமாக வந்தது போல சந்தோஷங்களை குழப்பி அள்ளி பூசிக்கொண்டிருக்கிறாள், அப்போது “ரஞ்சிதா என்ன பண்ணிகிட்டிருக்க?” என்று அப்பாவின் மிரட்டலால் சுயநினைவுக்கு அவள் வந்து பார்த்தால் மாட்டு சாணத்தை எடுத்து குழப்பி தன் முகத்தில் பூசிக்கொண்டிருக்கிறாள்.
உடனே தன் செய்கையை நிறுத்திவிட்டு, மாட்டிக்கொண்டதை காட்டிக் கொள்ளாமல் சுதாரிப்பதற்குள் அவள் அருகில் அப்பா வந்து நின்று ”என்ன இது? எந்திரி மேல” என்று சத்தமிட ரஞ்சிதம் சற்று உலரலுடன் சாமாளிக்க வார்த்தைகளை தேடி..., கடைசியில் ”இல்லப்பா மூஞ்சில மோப்புரு அதிகமா இருக்கு பசு மாட்டு சாணிய பூசினா போயிருன்னு நம்ம கண்ணம்மா சொன்னா” என்று குழைந்து நெழிய, அவள் சொன்னதை கேட்டு அப்பா சிரித்து கொண்டே விலகி தாரமங்கலம் டவுனுக்கு போகிறார். அப்பாவின் தலை மறைந்ததுமே வேகமாக கிணற்றுக்கு போய் தண்ணீர் கொண்டு முகத்தை சுழித்துக்கொண்டே கழுவுகிறாள். சவ்வாது கொஞ்சம் முகத்திற்கு போட்டு சாண வாசத்தை விரட்டுகிறாள். நாளை மாமனை காணும் ஆவலோடு அதற்கான ஆயத்த வேலைகளால் மாலையே வந்துவிடுகிறது, மின்சாரம் இல்லாத சில வீடுகளில் சிம்னி விளக்குகள் தொங்கிக் கொண்டிருக்க… வான வின்மீன்களை எண்ணிக் கொண்டு கயிற்று கட்டிலில் ரஞ்சிதம் தன் மாமாவின் ஃபோனுக்கு மிஸ்டு கால் தந்து, தந்து விளையாடிக் கொண்டிருக்கிறாள் நிரம்பிய காதலுடன்.
பிப்ரவரி 14-காதலர் தினம்,
கிழக்கு விடிவெள்ளி முளைத்ததுமே ரஞ்சிதம் எழுந்து (தூங்கினால் தானே எழுந்திரிக்க) தன் வீட்டு சேவலை கூவச் சொல்லி பரன் மீதிருந்த கோழி கூண்டை தட்டிவிட்டு, விட்டு காலை வேலைகளை வேகமாக செய்யத் தொடங்குகிறாள், காலை சூரியன் மேகக் கூட்டத்தோடு மறைந்து விளையாடி மகிழ்திருக்க, ரஞ்சிதம் குளித்து முடித்து காதலர் தின சிறப்பு உடையான கருப்பு பட்டு தாவணியில், தன் வீட்டு மாடத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருந்த சிறிய கண்ணாடியில் ஒரு அரைக்கால் மணி நேரம் தன் அழகையெல்லாம் அள்ளி, பூசி, முடிந்து, அழகுக்கு கொஞ்சம் ஆடம்பர அலங்காரம் செய்து, இரட்டை ஜடையில் இரத்த நிற செம்பருத்தியை செருகிக் கொண்டு, ஜலகண்டபுரம் சந்தையில் வாங்கிய சின்ன ”லவ்பேட்ஸ்” பரிசை மடியில் மறைத்து அது கீழே நழுவி விடாமல் கவனத்தோடும், தன் வயிற்றில் பிறந்த குழந்தையின் முதல் தமிழை கேட்கும் அம்மாவை போல மாமனைப் பார்க்கும் பூரிப்புடன், கிழக்கு மேட்டில் இருக்கும் கருப்பண்ணசாமி கோவிலுக்கு, தரைக்கே தெரியாமல் தன் நடையில் வேகம் கூட்டி நடக்கிறாள்...
தான் வந்து சேருவதற்கு முன்னே கோவிலுக்கு மாமா மணி வந்து காத்திருப்பதை தூரத்திலேயே ரஞ்சிதம் பார்த்து விட்டு, வெளியூர் சென்ற அப்பா நடு இரவில் வந்தாலும் அவர் வாங்கி வந்த விளையாட்டு பொருட்களை அப்போதே பார்க்க அவசரப்படும் குழந்தையாக மாறி நடையில் வேகம் கூட்ட, மணியை நெருங்கும் சமயம் எங்கிருந்தோ வந்து ஒட்டிகொண்ட வெட்கத்தால் ரஞ்சிதம் தட்டு தடுமாறி மணியின் பக்கம் வராமல் சற்று இடைவெளியிலேயே நின்று எதிரே இருக்கும் கருவேலமரத்தடி திட்டில் அமர்ந்துக்கொள்கிறாள். இவளின் வெட்கத்தின் வாடிக்கையை உணர்ந்து மணியே எழுந்து வந்து ரஞ்சித்தின் முன்னால் நிற்கிறான். ரஞ்சிதமோ தன் கருப்பு தாவணி முனையின் தையலை பிரிக்கும் வேலையை வெட்கத்தோடு சேர்ந்து செய்துகொண்டிருக்கிறாள், மணி பக்கம் வந்தும் இன்னும் பேசாமல் இருப்பதை எண்ணி விரல் வெட்கத்தை நிறுத்திவிட்டு துணிச்சலை துணைக்கழைத்து தலை நிமிர்ந்து மாமா மணியை பார்க்கிறாள், மணியின் முகமோ ரஞ்சிதத்தின் கருப்பு தாவணியை பார்த்து வெளிரிப் போய் இருக்க..., ஆவலுடன் காண வந்த மணியின் கண்களில் கோபம் தேங்குவதை கண்டு “என்னாச்சு மாமா ஏ? மூஞ்சிய இப்பிடி வச்சிருக்க?” என்று கேட்டு விட்டு அவளே மணியின் கையை பிடித்திழுத்து தன் அருகில் அமர வைக்கிறாள். ஆனாலும் மணியின் கோபம் குறையாமல் இருப்பதை கண்டு “எதுக்கு கோவம்?” , சற்று யோசித்து விடை கிட்டியது போல “ஆ....ம் நேத்து ஊங்கூட ஃபோனல பேசும் போது டே-ன்னு சொல்லலன்னு தானே?” என்று ஒரு முறை அவனைப் பார்த்துவிட்டு கெஞ்சலாய். ” சொல்லு டா மாமா” என்க. மணி அவளின் கருப்பு தாவணியை பார்த்து “என்ன இது கருப்பு கலருல டிரஸ் போட்டு வந்திருக்க லவ்வர்ஸ் டே-க்கு” சொல்லிக் கொண்டே வெருப்போடு வேறு பக்கம் முகத்தை திரும்பிக்கொள்கிறான்.
”நீ சொன்ன கலருல தானே போட்டு வந்திருக்கேன்” ரஞ்சிதம் சொல்லி முடிப்பதற்குள் கோபமாக மணி குறுக்கிட்டு ” நா சொன்னேனா? என்று பக்கத்தில் இருந்த கருபண்ணசாமியை பார்த்து விட்டு ”கருப்புனா இந்த சாமிக்கே ஆகாதுன்னு சொல்வாங்க, நல்ல நாள்ல இதவேறப் போட்டு வந்து நிக்கர, நேத்து ஃபோன்ல என்ன சொன்னேன்?”. மணியின் சற்று தடித்த குரலை கேட்டு ரஞ்சிதம் முகம் வாடிப்போக, சற்று நேரம் கழித்து அவனுக்கு பதில் சொல்கிறாள், ”நீ நேத்து ஃபோனுல நீல நெறம்னா நிஜமான காதல்னும், பச்சை நெறம்னா ஊருக்கே ஒசந்த காதல்னும், அப்புறம் மஞ்ச கலருனா நம்ம மனசு ரண்டும் சேந்திருக்குன்னு சொன்ன” என்று விக்கி திணறிக்கொண்டே தொடர்ந்தாள் ”சிவப்பு நெறத்துல உடுத்துனா சேந்து நாம வாழுவம்னு சொ..ன்..னா.. ” என்று மணியை பார்த்ததுமே சத்தம் குறைத்தாள். “அதுல ஏதாவது ஒரு கலர உடுத்தி வரவேண்டியதுதானே?” என்று மணி கேட்க,
”இல்ல நீ சொன்ன எல்லா நெறத்தலயும் உடுத்துனா நாம ரொம்ப நாளைக்கு சேந்தே வாழுவோம்னு நெனச்சேன், அத்தனையும் உடனுக்குடனே மாத்தி, மாத்தி போட்டு வர நா சினிமாகாரியா இருந்தா பரவாயில்ல, அதான் நேத்து சாயங்காலமே நம்ம சாயக்கார மாரிமுத்து கிட்ட சொல்லி ஒவ்வொரு நெறத்தையும் சரி சமமா கலந்து என் தாவணியில சாயம்போட சொன்னேன் அதத்தான் உடுத்தி வந்திருக்கேன்” என்று சொல்லி முடிக்க,
வெகுளிதனமான அவள் மனதில் வேர்விட்டிருக்கும் காதலின் ஆழத்தையும் அதன் ஊடாக தோன்றிய இந்த வேடிக்கை செய்கையினாலும் மெய் சிலிர்த்தவனாக, இக்கனிவான மெல்லிய காதலின் உள்ளூர மண்டியிருக்கும் அன்பை புரிந்து கொண்டவனாகவும், அடிமைப்பட்டு கிடந்த மனதில் புரட்சி கருத்துக்கள் புகுந்தது போல், கருப்பு மேலிருந்த வெருப்பை தூக்கி எரிந்தான் மணி. அரைகுறையாக தேர்வு எழுதிவிட்டு பட படப்புடன் தேர்வு முடிவுக்காய் தவிப்போடு காத்திருக்கும் மாணவியாக ரஞ்சிதம், மணியின் முகத்தை பார்த்துக்கொண்டு எதிரில் நின்றிருக்கிறாள். இவன் முகத்தின் மாற்றங்கள் புரியாமல்,
மணி செல்லமாக கண் சிமிட்டி ரஞ்சிதத்தை பார்த்து சிரித்து அவளை நெருங்க.. மக்கள் சர்வாதிகாரத்தால் பொதுவுடைமையை கைப்பற்றி செங்கொடி பறக்க விட்டதாய்.. மகிழ்ச்சி திளைப்பில் மிதந்தவள் இதுதான், சரியான தருணம் என்று தன் பரிசு பொருளான “லவ்பேட்ஸ்”-ஸை தருகிறாள் மணி அதை வாங்கியதும், லவ்பேட்ஸ்-சும் கருப்பாக இருப்பதாய் உணருகிறான், சட்டென மணி ரஞ்சிதத்தை கட்டியணைத்து உச்சி முகர, இயல்பை மறந்த இருவரும் மாற்று தேசத்திற்கு போய்க்கொண்டிருக்கிறார்கள், கருப்பு மெல்ல மெல்ல இவர்களுக்குள்ளே பரவத் தொடங்குகிறது...
------------------------------------------------

கைபேசியின் ”அலாரன்” அடிக்கடி ஒளி எழுப்பி ஓய்ந்து போன நிலையில், மெல்ல சோம்பல் முறித்தது என் தலையனைகள். இரவு குறுஞ்செய்தி நீட்டிப்பால் காலை தாமதமாக படுக்கையிலிருந்து எழுந்து, என்னை எழுப்ப முயற்சித்த கைபேசி விரக்தியாக என்னை வெரித்துப் பார்த்துக் கொண்டிருப்பதை காட்டிக்கொள்ளாமல் அதை கையில் எடுத்து, எப்பொழுதும் போல ஸ்பீடு டைலிங் 1 எண்ணை அழுத்தி பிரியா என்ற பெயருக்கு அழைப்பு கொடுக்க, எதிர் திசையிலிருந்து ஒரு ரெகார்டிங் குரல் “நீங்கள் தொடர்பு கொண்ட வாடிக்கையாளர் எண் ஸ்சுட்ச் ஆஃப் செய்யப் பட்டுள்ளது”” என்று சொல்லி விட்டு அதையே திரும்ப ஆங்கிலத்தில் சொல்ல முயற்சிக்க, நான் டக்கென இணைப்பை துண்டித்துவிட்டேன்.
மணி:காலை 9.00 ஆகுது பிரியா இன்னுமா தூங்குறா?என்று நான் நெற்றியை புருவத்தின் துணையோடு சுறுக்கி விட்டு, மேஜை மேல் இருந்த தினசரியில் மூழ்கினேன். படித்துக் கொண்டே சினிமா பக்கம் புரட்டும் போது ஒரு சினிமா விளம்பரப்படம் பிரியாவை ஞாபகப்படுத்தியது,உடனே மீண்டும் ஒரு அழைப்பு விட மறுபடியும் ஆங்கில குரலிற்கு அச்சப்பட்டு அவசரமாக துண்டித்து விட்டேன். (ரகசியம்:எனக்கும் ஆங்கிலத்திற்கும் ரொம்ப தூரங்க அதான் இப்படி யாராவது பேசுனா எனக்கே தெரியாமா அனிச்சை செயலாய் மெரண்டு போய்டுறேன்) மீண்டும் தினசரிக்குள் திரும்பி என் சிந்தனைகளோடு சேர்த்து புரட்டி எடுத்துக் கொண்டிருந்தேன். தினசரியின் ஊடாக பிரியாவைப் பற்றி சிந்தனைக்குள் நுழைந்தது என் ஒட்டு மொத்த கவனமும்...
பிரியா தான் என் ஓரே காதலி மூன்று மாதமாக காதல் கடலில் நாங்கள் இருவரும் நீந்தி திளைக்கிறோம், துணையோடு சிறகடிக்கும் தும்பிகள் போல் பதுங்கி, பயந்து காதலிக்கிறோம். அவள் குடும்பம் ரொம்ப கண்டிப்பானதுங்க எப்டினா...”மாச கடைசியில் போக்குவரத்து விதிகளை மிகச் சரியாக (பின்)பற்றும் டிராஃபிக் போலீஸ் போல, என்.சி.சி வகுப்பில் ரண்டு இட்லி தந்து லெப்ட், ரைட் வாங்கும் ஆசிரியர் போல்...” கட்டாசிட்டான ஃபேமலி , பிரியாவின் நிலை கல்லூரிய விட்டா வீடு, வீட்ட விட்டா கல்லூரி தான். அவள் கல்லூரி பேருந்திலிருந்து இறங்கினதும் தன் கால் தரையில் கூட படாமல் அவளின் அண்ணனோ இல்ல அப்பாவோ இரு சக்கர வாகனத்தில் வந்து அழைத்துக்கொண்டு போய்விடுவார்கள். இந்த “நேர்நில், ஓய்ந்துநில்” குடும்பதிற்கு மத்தியில் பிரியாவோ சேனம் கட்டுன குதிரை போல நடந்திட்டு இருக்கிறாள்.
நேற்று நான்வேறு அவளுடன், ஒழுங்காவே SMS, ஃபோன் பண்றதில்லன்னு சண்டை போட்டுவிட்டேன்... அதனால எனக்கு இன்னும் கொஞ்சம் மனகுழப்பம் அதிகாமாக இருக்கிறது. சட்டென ஒரு பொறி (இல்ல கடலை) தட்ட, பிரியாவின் கைபேசி தண்ணீரில் விழுந்து பழுதாகிவிட்டதை பிரியாவின் தோழிக்கு ஃபோன் செய்து கேட்டு தெரிந்து கொண்டதால் கொஞ்சம் இயல்பானேன் ஆனாலும் “சிரங்கு பிடித்த கையும், இரும்பு பிடித்த கையும் போல.. செல் ஃபோன் பிடித்த என் கை சும்மா இருக்கமறுக்கிறது.
நான் அப்படியே தேங்கிக்கிடக்குற தண்ணீரில் சாய கழிவுகள கலந்தது போல கலங்கிட்டேன்; பிரியாவோட தொடர்பு இல்லாம பழைய கற்காலத்துல வாழ்ரதா! எனக்கு தோன்றியது, ஒரு நாள், 2, 3..... என்று ஐந்து நாளை தொட தனிமையை மொத்தமா சுனாமிப் போல என்னைச் சுழற்றியடிக்கிறது... என்னை நானே நெருங்கமுடியாமல் விலகச் செய்தது அவளின் பிரிவு, நடு சாமத்தில் ஒத்தையடி பாதையில் நான் மட்டும் தனியாக நடந்து போவது போல அவளில்லாத இந்த 5 நாட்களும் வலிக்கிறது.
ஆறாம் நாள் காலை உறங்கியும், உறங்காமலும் விடிந்ததும் வாடிக்கையான வேலையாக கைபேசியில் பிரியாவின் எண்ணுக்கு ஒரு அழைப்பு, ”ஸ்சுவிச் ஆஃப்” குரலில் விரக்கியுடன் நான் துண்டித்துவிட்டு பிரியாவின் பழைய குறுஞ்செய்திகளை ஒரு முறை இல்லை திரும்ப, திரும்ப பல முறைப் பார்த்து தனிமைக்கு சற்று இடைவெளி தர முயன்றேன், சேது படத்தில் வரும் விக்ரமன் போல சங்கிலியால் கட்டாமலே விரக்தியான பார்வையோடு எங்கோ (செல்ல...) பார்த்துக் உக்கார்ந்துக் கொண்டிருந்தேன். அது என் வீட்டின் கேட்டில் இருக்கும் பழைய ஒட்டடை பிடித்த தபால் பெட்டி, நான் சட்டென மெல்ல எழுந்து போய் அந்த சிவப்பு மங்கிய பெட்டியை கரிசனமுடன் துடைத்துவிட்டு (தபால் பெட்டி:”செல் ஃபோன் இல்லனாதான் என் ஞாபகமே வருது இவங்களுக்கு”) மறுபடியும் நான் பழைய லுக் பொசிஷனுக்கே வந்துவிட்டேன்....
“ஏய்... உஸ்... பாத்து” என்ற குரல் என்னை தன் பக்கம் திரும்ப வைத்த எதிர் வீட்டு பால்கனியில் ஒரு பெண் தன் புறாக்களுக்கு இரை போட்டுக்கொண்டிருந்தாள். என் பார்வை கொஞ்சம் அங்கே குவிய இரையை கொத்தி தின்னும் புறாவின் கால்களில் தூதுக்காக ஏங்கும் மன்னர் மனநிலையில் நிலைத்திருந்தது ...அத்தருணம் சாலையில் ஒரு பேருந்து வந்து நிற்கும் சத்தம் கேட்டு அந்த பேருந்தின் மேல் என் பார்வை தொற்றிக்கொண்டது, பேருந்து பின்புற கண்ணாடியை உற்றுத் தேடியது, “கிழக்கே போகும் ரயில்”” மாதிரி இந்த பேருந்து பிரியாவின் ஊர் வழியாக போகும் “கிழக்கே போகும் பேருந்து”என்பதனால்”; இப்படியே பல பழைய கற்பனைகளை ரொம்ப மெணக்கெட்டு யோசித்து, யோசித்து... பொருத்ததும் போதும் அவளை போய் பார்த்துவிட்டே வரலாம் என்று என் இருசக்கர வாகனத்தை எடுத்து. அதன் பிரேக், பெட்ரோல்,ஹெல்மெட் மற்றும் லைட் எரிகிறதா என்று சோதனை செய்தேன். (எதுக்கு இந்தமாறி பில்டஃப்னு நினைக்கிறீங்கலா!? நல்ல காரியத்துக்கு போகும் போது தடங்கல் வராம இருக்கதான்)
வண்டி வேகமெடுத்து ப்ரியாவின் வீட்டின் முன் டக்கென நின்றது அவளின் வீட்டைப் பார்த்தால் ஒரே அதிச்சி மாறி,மாறி வந்தது...
*ஒரு பெரிய திண்டுகல் பூட்டு பிரியா வீட்டு கதவில் தொங்குகிறது,
*அவங்க பாட்டி இல்ல,இல்ல தாத்தா இறந்து விடுகிறார்,
*பிரியாவின் அப்பா மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்... என்று பல புத்திசாலிதன தேவையில்லாதக் கற்பனைகள் என் வாகனத்தின் பின் இருக்கையில் கூடாவே பயணித்துக் கொண்டிந்தது. சராசரி தமிழ் சினிமா பார்த்த பாதிப்பில் நான் யோசித்துக் கொண்டே பிரியா வீடு நோக்கி வண்டியை விரட்டிக் கொண்டிருந்தேன்...
ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி கொஞ்சம் இளைப்பாரி...தேநீரும், என்னைப் போன்ற பெரும்பாலான இளைய சமுதாயத்திற்கு ஆறாம் விரலான சிகரெட்டையும் புகைத்துவிட்டு, நான் வண்டியை ஸ்டாட்ச் செய்யும் போது அருகில் இருந்த ஒரு புத்தக கடை என்னை அழைக்க, கடைக்குள் என் கால்கள் என்னையும் மீறி நுழைந்து. உள்ளே போய் பல புத்தகங்களை புரட்டி, கலைத்து மூச்சிரைக்க வைத்து ஒரு புத்தகத்தை வாங்கிக் கொண்டு மிக்க மகிழ்ச்சியோடு கிளம்பினேன்,என் இரு சக்கர வாகனம் றெக்கைக் கட்டி நீந்தியது தார்ச்சாலையில். பிரியாவின் பிரிவால் என்னுள் இதுவரை இருந்த கவலைகளையும், மன அழுத்தங்களையும் தூர விரட்டிவிட்டது இந்த ஒரு புத்தகம். பிரியாவிற்கு பரிசளிக்க ஒரு நல்ல புத்தகம் இதைவிட்டால் வேறெதும் இல்லை, இந்த 6 நாள் பிரிவையும் சமப்படுத்தும் இந்த ஒரு புத்தகம் அது என்ன புத்தகம்னா? “ஒரே வாரத்தில் நீங்களும் செல் ஃபோன் மெக்கானிக் ஆகலாம் ”.
-------- ------------- --------