Monday, May 16, 2011

*சான்றோன் எனக் கேட்டத்தாய்
















வாகனம் வேண்டாமென
காலாற...
தட்டான் கரட்டோரம்
தடம் பாத்து
நா நடக்க
சரட்டான், ஓணானெல்லாம்
சமுக்காளம் தேடும்
குளிரப்போல
பதுங்கி தெறிக்க,

தொலைதூர
மாட்டு மணியோடு
கடையாணி சத்தம் கலந்து
தள்ளாடி
உருண்டு வர,

சாரி பணமரங்க
கை கோர்த்து
காஞ்ச ஓல மேல
காத்த தட்டி
வழி நெடுக
சலசலத்து வரவேற்க,

ஊரான் கெணத்து மேட்டு
உச்சி மர கிளை மேலே
ஜோடி கிளி ரெண்டுக
கொஞ்சி மகிழ,
என்ன கண்டு
சோளகொல்ல பொம்மையென
சொகத்தவிட்டு
பிரிஞ்சோட,

கருப்பு சாமி கோவில்
கல்லுகட்டில்
கூடு கட்டியிருந்த
கொசு தேனீ கூட்டமெல்லாம்
குய்யோ, முய்யோவென
கொலவ சத்தமிட,

வெங்கிழிச்சாங்கல்லு காட்டுல
வெள்ளாட்டு பட்டிகுள்ள ஆடுக
தட்டிய முட்டி தள்ளும்
முயற்சியில்
முண்டியடித்து
மொகம் காட்ட
என்ன
அடையாளம் கண்டழைக்க,

முன்ன தெருவுகுள்ள
இறங்கியதுமே
பிஞ்சு,பொடிசுகல்லாம்
பின் தொடர,
நலம் விசாரிப்புகளோடு
பெருசுகளும்,
அனைத்து சொந்தகளோடு
ஆடு,மாடு,காக்கா,குருவிகளும்...

“காரவீட்டு கூர மேல
காக்கா கத்துது
சொந்த சனம்
சோத்துக்கு வரும்போல
ஒல வைக்கும் போது
ஒரு பிடி சேத்து போடனும்” என
அஃறிணைகளோடு
அலவளாவும்
என்
அம்மா,
ஊரோடு நா வரும்
ஊர்வலத்த கண்டு
உச்சி குழுந்து
என்ன பாத்த
அந்த
உயிர் பார்வை
ஒன்னு போதும்
உதரி தள்ளிடுவேன்
இந்த
ஜில்லா கலெக்டர்
பதவியையும் கூட...

1 comment:

  1. “காரவீட்டு கூர மேல
    காக்கா கத்துது
    சொந்த சனம்
    சோத்துக்கு வரும்போல
    ஒல வைக்கும் போது
    ஒரு பிடி சேத்து போடனும்” என
    அஃறிணைகளோடு
    அலவளாவும்
    என்
    அம்மா,
    ஊரோடு நா வரும்
    ஊர்வலத்த கண்டு
    உச்சி குழுந்து
    என்ன பாத்த
    அந்த
    உயிர் பார்வை
    ஒன்னு போதும்
    உதரி தள்ளிடுவேன்
    இந்த
    ஜில்லா கலெக்டர்
    பதவியையும் கூட...



    மிகவும் அருமை.... நல்ல வரிகள்

    ReplyDelete