Friday, February 11, 2011

*கைபேசியின் தனிமைகள்...








கைபேசியின் அலாரன் அடிக்கடி ஒளி எழுப்பி ஓய்ந்து போன நிலையில், மெல்ல சோம்பல் முறித்தது என் தலையனைகள். இரவு குறுஞ்செய்தி நீட்டிப்பால் காலை தாமதமாக படுக்கையிலிருந்து எழுந்து, என்னை எழுப்ப முயற்சித்த கைபேசி விரக்தியாக என்னை வெரித்துப் பார்த்துக் கொண்டிருப்பதை காட்டிக்கொள்ளாமல் அதை கையில் எடுத்து, எப்பொழுதும் போல ஸ்பீடு டைலிங் 1 எண்ணை அழுத்தி பிரியா என்ற பெயருக்கு அழைப்பு கொடுக்க, எதிர் திசையிலிருந்து ஒரு ரெகார்டிங் குரல் நீங்கள் தொடர்பு கொண்ட வாடிக்கையாளர் எண் ஸ்சுட்ச் ஆஃப் செய்யப் பட்டுள்ளது என்று சொல்லி விட்டு அதையே திரும்ப ஆங்கிலத்தில் சொல்ல முயற்சிக்க, நான் டக்கென இணைப்பை துண்டித்துவிட்டேன்.

மணி:காலை 9.00 ஆகுது பிரியா இன்னுமா தூங்குறா?என்று நான் நெற்றியை புருவத்தின் துணையோடு சுறுக்கி விட்டு, மேஜை மேல் இருந்த தினசரியில் மூழ்கினேன். படித்துக் கொண்டே சினிமா பக்கம் புரட்டும் போது ஒரு சினிமா விளம்பரப்படம் பிரியாவை ஞாபகப்படுத்தியது,உடனே மீண்டும் ஒரு அழைப்பு விட மறுபடியும் ஆங்கில குரலிற்கு அச்சப்பட்டு அவசரமாக துண்டித்து விட்டேன். (ரகசியம்:எனக்கும் ஆங்கிலத்திற்கும் ரொம்ப தூரங்க அதான் இப்படி யாராவது பேசுனா எனக்கே தெரியாமா அனிச்சை செயலாய் மெரண்டு போய்டுறேன்) மீண்டும் தினசரிக்குள் திரும்பி என் சிந்தனைகளோடு சேர்த்து புரட்டி எடுத்துக் கொண்டிருந்தேன். தினசரியின் ஊடாக பிரியாவைப் பற்றி சிந்தனைக்குள் நுழைந்தது என் ஒட்டு மொத்த கவனமும்...

பிரியா தான் என் ஓரே காதலி மூன்று மாதமாக காதல் கடலில் நாங்கள் இருவரும் நீந்தி திளைக்கிறோம், துணையோடு சிறகடிக்கும் தும்பிகள் போல் பதுங்கி, பயந்து காதலிக்கிறோம். அவள் குடும்பம் ரொம்ப கண்டிப்பானதுங்க எப்டினா...மாச கடைசியில் போக்குவரத்து விதிகளை மிகச் சரியாக (பின்)பற்றும் டிராஃபிக் போலீஸ் போல, என்.சி.சி வகுப்பில் ரண்டு இட்லி தந்து லெப்ட், ரைட் வாங்கும் ஆசிரியர் போல்... கட்டாசிட்டான ஃபேமலி , பிரியாவின் நிலை கல்லூரிய விட்டா வீடு, வீட்ட விட்டா கல்லூரி தான். அவள் கல்லூரி பேருந்திலிருந்து இறங்கினதும் தன் கால் தரையில் கூட படாமல் அவளின் அண்ணனோ இல்ல அப்பாவோ இரு சக்கர வாகனத்தில் வந்து அழைத்துக்கொண்டு போய்விடுவார்கள். இந்த நேர்நில், ஓய்ந்துநில் குடும்பதிற்கு மத்தியில் பிரியாவோ சேனம் கட்டுன குதிரை போல நடந்திட்டு இருக்கிறாள்.

நேற்று நான்வேறு அவளுடன், ஒழுங்காவே SMS, ஃபோன் பண்றதில்லன்னு சண்டை போட்டுவிட்டேன்... அதனால எனக்கு இன்னும் கொஞ்சம் மனகுழப்பம் அதிகாமாக இருக்கிறது. சட்டென ஒரு பொறி (இல்ல கடலை) தட்ட, பிரியாவின் கைபேசி தண்ணீரில் விழுந்து பழுதாகிவிட்டதை பிரியாவின் தோழிக்கு ஃபோன் செய்து கேட்டு தெரிந்து கொண்டதால் கொஞ்சம் இயல்பானேன் ஆனாலும் “சிரங்கு பிடித்த கையும், இரும்பு பிடித்த கையும் போல.. செல் ஃபோன் பிடித்த என் கை சும்மா இருக்கமறுக்கிறது.

நான் அப்படியே தேங்கிக்கிடக்குற தண்ணீரில் சாய கழிவுகள கலந்தது போல கலங்கிட்டேன்; பிரியாவோட தொடர்பு இல்லாம பழைய கற்காலத்துல வாழ்ரதா! எனக்கு தோன்றியது, ஒரு நாள், 2, 3..... என்று ஐந்து நாளை தொட தனிமையை மொத்தமா சுனாமிப் போல என்னைச் சுழற்றியடிக்கிறது... என்னை நானே நெருங்கமுடியாமல் விலகச் செய்தது அவளின் பிரிவு, நடு சாமத்தில் ஒத்தையடி பாதையில் நான் மட்டும் தனியாக நடந்து போவது போல அவளில்லாத இந்த 5 நாட்களும் வலிக்கிறது.

ஆறாம் நாள் காலை உறங்கியும், உறங்காமலும் விடிந்ததும் வாடிக்கையான வேலையாக கைபேசியில் பிரியாவின் எண்ணுக்கு ஒரு அழைப்பு, ”ஸ்சுவிச் ஆஃப்” குரலில் விரக்கியுடன் நான் துண்டித்துவிட்டு பிரியாவின் பழைய குறுஞ்செய்திகளை ஒரு முறை இல்லை திரும்ப, திரும்ப பல முறைப் பார்த்து தனிமைக்கு சற்று இடைவெளி தர முயன்றேன், சேது படத்தில் வரும் விக்ரமன் போல சங்கிலியால் கட்டாமலே விரக்தியான பார்வையோடு எங்கோ (செல்ல...) பார்த்துக் உக்கார்ந்துக் கொண்டிருந்தேன். அது என் வீட்டின் கேட்டில் இருக்கும் பழைய ஒட்டடை பிடித்த தபால் பெட்டி, நான் சட்டென மெல்ல எழுந்து போய் அந்த சிவப்பு மங்கிய பெட்டியை கரிசனமுடன் துடைத்துவிட்டு (தபால் பெட்டி:செல் ஃபோன் இல்லனாதான் என் ஞாபகமே வருது இவங்களுக்கு) மறுபடியும் நான் பழைய லுக் பொசிஷனுக்கே வந்துவிட்டேன்....

ஏய்... உஸ்... பாத்து என்ற குரல் என்னை தன் பக்கம் திரும்ப வைத்த எதிர் வீட்டு பால்கனியில் ஒரு பெண் தன் புறாக்களுக்கு இரை போட்டுக்கொண்டிருந்தாள். என் பார்வை கொஞ்சம் அங்கே குவிய இரையை கொத்தி தின்னும் புறாவின் கால்களில் தூதுக்காக ஏங்கும் மன்னர் மனநிலையில் நிலைத்திருந்தது ...அத்தருணம் சாலையில் ஒரு பேருந்து வந்து நிற்கும் சத்தம் கேட்டு அந்த பேருந்தின் மேல் என் பார்வை தொற்றிக்கொண்டது, பேருந்து பின்புற கண்ணாடியை உற்றுத் தேடியது, கிழக்கே போகும் ரயில்” மாதிரி இந்த பேருந்து பிரியாவின் ஊர் வழியாக போகும் “கிழக்கே போகும் பேருந்துஎன்பதனால்”; இப்படியே பல பழைய கற்பனைகளை ரொம்ப மெணக்கெட்டு யோசித்து, யோசித்து... பொருத்ததும் போதும் அவளை போய் பார்த்துவிட்டே வரலாம் என்று என் இருசக்கர வாகனத்தை எடுத்து. அதன் பிரேக், பெட்ரோல்,ஹெல்மெட் மற்றும் லைட் எரிகிறதா என்று சோதனை செய்தேன். (எதுக்கு இந்தமாறி பில்டஃப்னு நினைக்கிறீங்கலா!? நல்ல காரியத்துக்கு போகும் போது தடங்கல் வராம இருக்கதான்)

வண்டி வேகமெடுத்து ப்ரியாவின் வீட்டின் முன் டக்கென நின்றது அவளின் வீட்டைப் பார்த்தால் ஒரே அதிச்சி மாறி,மாறி வந்தது...

*ஒரு பெரிய திண்டுகல் பூட்டு பிரியா வீட்டு கதவில் தொங்குகிறது,

*அவங்க பாட்டி இல்ல,இல்ல தாத்தா இறந்து விடுகிறார்,

*பிரியாவின் அப்பா மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்... என்று பல புத்திசாலிதன தேவையில்லாதக் கற்பனைகள் என் வாகனத்தின் பின் இருக்கையில் கூடாவே பயணித்துக் கொண்டிந்தது. சராசரி தமிழ் சினிமா பார்த்த பாதிப்பில் நான் யோசித்துக் கொண்டே பிரியா வீடு நோக்கி வண்டியை விரட்டிக் கொண்டிருந்தேன்...

ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி கொஞ்சம் இளைப்பாரி...தேநீரும், என்னைப் போன்ற பெரும்பாலான இளைய சமுதாயத்திற்கு ஆறாம் விரலான சிகரெட்டையும் புகைத்துவிட்டு, நான் வண்டியை ஸ்டாட்ச் செய்யும் போது அருகில் இருந்த ஒரு புத்தக கடை என்னை அழைக்க, கடைக்குள் என் கால்கள் என்னையும் மீறி நுழைந்து. உள்ளே போய் பல புத்தகங்களை புரட்டி, கலைத்து மூச்சிரைக்க வைத்து ஒரு புத்தகத்தை வாங்கிக் கொண்டு மிக்க மகிழ்ச்சியோடு கிளம்பினேன்,என் இரு சக்கர வாகனம் றெக்கைக் கட்டி நீந்தியது தார்ச்சாலையில். பிரியாவின் பிரிவால் என்னுள் இதுவரை இருந்த கவலைகளையும், மன அழுத்தங்களையும் தூர விரட்டிவிட்டது இந்த ஒரு புத்தகம். பிரியாவிற்கு பரிசளிக்க ஒரு நல்ல புத்தகம் இதைவிட்டால் வேறெதும் இல்லை, இந்த 6 நாள் பிரிவையும் சமப்படுத்தும் இந்த ஒரு புத்தகம் அது என்ன புத்தகம்னா? “ஒரே வாரத்தில் நீங்களும் செல் ஃபோன் மெக்கானிக் ஆகலாம் ”.

-------- ------------- --------

1 comment: