Wednesday, February 16, 2011

*காதலர் தின – கருப்பு













டு உச்சி சூரியன் தன் முழு பலத்தையும் வெய்யிலாக வாட்டிக் கொண்டிருக்கிறது, வேலை யேதும் செய்யாமலே சோம்பேறி வியர்வை உடம்பில் வழியும் மதிய நேரம், தெருவை எட்டிப் பார்த்தால் காரவீட்டு தெருமுனை வளைவு வரை ஆள் நடமாட்டமே இல்லாமல் வெறுச்சோடிக்கிடக்கிறது. ரஞ்சிதம் மட்டும் மாட்டு கட்டுதறியில் ஏதோ முணு முணுத்துக் கொண்டே, ஈன்று மூன்று மாதமே ஆன கன்றுக்குட்டி வெய்யிலில் வெளியே துள்ளித் திரிகிறதென்று கயிற்றால் கட்டிப் போட்டுக்கொண்டிருக்கிறாள். பக்கத்தில் இருக்கும் தாய் பசுவோ கன்றை உற்றுப் பார்த்துக் கொண்டு தனக்கிட்ட வைக்கோலை அசைப் போட்டுக்கொண்டிருந்தது.

தூரத்தில் அடிக்கிற வெய்யிலுக்கு தலையில் துண்டை கட்டிக்கொண்டு கானலோடு வீடு நோக்கி நடந்து வந்து, வீட்டின் வெளி திண்ணையில் அமர்ந்து, உஸ்... அப்பா என்ன வெய்ய... தன் தலையில் இருக்கும் துண்டை அவிழ்த்து காற்று வீசுகிறார் ரஞ்சிதத்தின் அப்பா. கட்டுதறி வேலையை விட்டுவிட்டு அப்பாவுக்கு குடிக்க தண்ணீர் தரும் போது ரஞ்சிதம் அப்பாவை பார்த்து என்னப்பா போன காரியம் முடிஞ்சுதா? என்க, தண்ணீரை குடித்துவிட்டு, முடிஞ்சதும்மா கொஞ்சம் வெய்ய தண்ணி இருந்தா ஊத்தி வைய்யு தண்ணியூத்திகிட்டு தாரமங்கலம் வரைக்கும் போய்ட்டு வரேன். என்று சட்டை பாக்கெட்டில் இருந்தவற்றை திண்ணை மேலே வைக்கிறார். ஒரு சில காகிதங்கள், இரண்டு பத்து ரூபாய், ஒரு ஐம்பது ரூபாய் தாள்களையும், நான்கைந்து சில்லறைகளையும் அதன் மேல் தன் செல்ஃபோனையும் வைத்துவிட்டு குளியலறை நோக்கி போகிறார்.

தென்னை ஓலையால் பின்னிக் கட்டிய குளியலறை பிரம்பு தட்டி கதவை திறந்து, அப்பா உள்ளே போய் சாத்தியதுமே, ரஞ்சிதம் வேகமாக குளியலறையை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே திண்ணை மேலிருந்த அப்பாவின் செல்ஃபோனை எடுத்து, ஃபோன் செய்கிறாள் ஈரோட்டில் இருக்கும் தன் மாமா மணிக்கு, நல்லா இருக்கியா? சாப்டியா?-வில் ஆரம்பித்து ....ச்..சீ..போ மாமா என்ற வெட்கத்தால் இவளோடு செல்ஃபோனும் சிவக்கிறது, இடையிடையே சில அப்புறங்களும் குறுக்கிட, இறுதியாக பிப்ரவரி 14 , காதலர் தினத்தில் என்ன நிற ஆடை அணியாலாம்-ல் வந்து நின்றது. அப்பாவின் குளியல்வரைதான் பேச முடியும் என்பதால், மனப்பாடம் செய்து ஆங்கிலம் ஒப்பிக்கும் தமிழ் வழி மாணவியாக பர பரத்தாள் ரஞ்சிதம். மாமா சொல்லும் வண்ண விளக்கங்களை உன்னிப்பாக கேட்டுக்கொண்டே ஒரு பக்கம் குளியலறை மீது கவனத்தை வைத்து பேசிக்கொண்டிருக்க.. இன்று இரவே ஊருக்கு வருவதாக மாமா சொல்லியதை கேட்டு சந்தோஷத்தில் குதுகலமடைந்துக் கொண்டிருக்கும் தருணம்,

குளியலறை கதவு திறக்கும் சத்தம் கேட்டு மாமானிடம் சொல்லியும், சொல்லாமலும் செல்ஃபோன் இணைப்பை துண்டித்துவிட்டு முன்பிருந்த அதே இடத்தில் ஃபோனை பதட்டதுடன் வைத்துவிட்டு கட்டுதறிக்கு சென்று தன் வேலையை தொடருகிறாள். மாதம் ஒரு முறைதான் ஊருக்கு வரும் மாமா, காதலர் தினமென்பதால் இரண்டாவது முறையாக வருவதை எண்ணி றெக்கை முளைத்த ஈசலாக..., துள்ளிக்குதிக்கிறாள். பயந்துகொண்டே போன கணக்கு தேர்வின் கேள்வி தாள் மிக சுலபமாக வந்தது போல சந்தோஷங்களை குழப்பி அள்ளி பூசிக்கொண்டிருக்கிறாள், அப்போது ரஞ்சிதா என்ன பண்ணிகிட்டிருக்க? என்று அப்பாவின் மிரட்டலால் சுயநினைவுக்கு அவள் வந்து பார்த்தால் மாட்டு சாணத்தை எடுத்து குழப்பி தன் முகத்தில் பூசிக்கொண்டிருக்கிறாள்.

உடனே தன் செய்கையை நிறுத்திவிட்டு, மாட்டிக்கொண்டதை காட்டிக் கொள்ளாமல் சுதாரிப்பதற்குள் அவள் அருகில் அப்பா வந்து நின்று என்ன இது? எந்திரி மேல என்று சத்தமிட ரஞ்சிதம் சற்று உலரலுடன் சாமாளிக்க வார்த்தைகளை தேடி..., கடைசியில் இல்லப்பா மூஞ்சில மோப்புரு அதிகமா இருக்கு பசு மாட்டு சாணிய பூசினா போயிருன்னு நம்ம கண்ணம்மா சொன்னா என்று குழைந்து நெழிய, அவள் சொன்னதை கேட்டு அப்பா சிரித்து கொண்டே விலகி தாரமங்கலம் டவுனுக்கு போகிறார். அப்பாவின் தலை மறைந்ததுமே வேகமாக கிணற்றுக்கு போய் தண்ணீர் கொண்டு முகத்தை சுழித்துக்கொண்டே கழுவுகிறாள். சவ்வாது கொஞ்சம் முகத்திற்கு போட்டு சாண வாசத்தை விரட்டுகிறாள். நாளை மாமனை காணும் ஆவலோடு அதற்கான ஆயத்த வேலைகளால் மாலையே வந்துவிடுகிறது, மின்சாரம் இல்லாத சில வீடுகளில் சிம்னி விளக்குகள் தொங்கிக் கொண்டிருக்க வான வின்மீன்களை எண்ணிக் கொண்டு கயிற்று கட்டிலில் ரஞ்சிதம் தன் மாமாவின் ஃபோனுக்கு மிஸ்டு கால் தந்து, தந்து விளையாடிக் கொண்டிருக்கிறாள் நிரம்பிய காதலுடன்.

பிப்ரவரி 14-காதலர் தினம்,

கிழக்கு விடிவெள்ளி முளைத்ததுமே ரஞ்சிதம் எழுந்து (தூங்கினால் தானே எழுந்திரிக்க) தன் வீட்டு சேவலை கூவச் சொல்லி பரன் மீதிருந்த கோழி கூண்டை தட்டிவிட்டு, விட்டு காலை வேலைகளை வேகமாக செய்யத் தொடங்குகிறாள், காலை சூரியன் மேகக் கூட்டத்தோடு மறைந்து விளையாடி மகிழ்திருக்க, ரஞ்சிதம் குளித்து முடித்து காதலர் தின சிறப்பு உடையான கருப்பு பட்டு தாவணியில், தன் வீட்டு மாடத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருந்த சிறிய கண்ணாடியில் ஒரு அரைக்கால் மணி நேரம் தன் அழகையெல்லாம் அள்ளி, பூசி, முடிந்து, அழகுக்கு கொஞ்சம் ஆடம்பர அலங்காரம் செய்து, இரட்டை ஜடையில் இரத்த நிற செம்பருத்தியை செருகிக் கொண்டு, ஜலகண்டபுரம் சந்தையில் வாங்கிய சின்ன லவ்பேட்ஸ் பரிசை மடியில் மறைத்து அது கீழே நழுவி விடாமல் கவனத்தோடும், தன் வயிற்றில் பிறந்த குழந்தையின் முதல் தமிழை கேட்கும் அம்மாவை போல மாமனைப் பார்க்கும் பூரிப்புடன், கிழக்கு மேட்டில் இருக்கும் கருப்பண்ணசாமி கோவிலுக்கு, தரைக்கே தெரியாமல் தன் நடையில் வேகம் கூட்டி நடக்கிறாள்...

தான் வந்து சேருவதற்கு முன்னே கோவிலுக்கு மாமா மணி வந்து காத்திருப்பதை தூரத்திலேயே ரஞ்சிதம் பார்த்து விட்டு, வெளியூர் சென்ற அப்பா நடு இரவில் வந்தாலும் அவர் வாங்கி வந்த விளையாட்டு பொருட்களை அப்போதே பார்க்க அவசரப்படும் குழந்தையாக மாறி நடையில் வேகம் கூட்ட, மணியை நெருங்கும் சமயம் எங்கிருந்தோ வந்து ஒட்டிகொண்ட வெட்கத்தால் ரஞ்சிதம் தட்டு தடுமாறி மணியின் பக்கம் வராமல் சற்று இடைவெளியிலேயே நின்று எதிரே இருக்கும் கருவேலமரத்தடி திட்டில் அமர்ந்துக்கொள்கிறாள். இவளின் வெட்கத்தின் வாடிக்கையை உணர்ந்து மணியே எழுந்து வந்து ரஞ்சித்தின் முன்னால் நிற்கிறான். ரஞ்சிதமோ தன் கருப்பு தாவணி முனையின் தையலை பிரிக்கும் வேலையை வெட்கத்தோடு சேர்ந்து செய்துகொண்டிருக்கிறாள், மணி பக்கம் வந்தும் இன்னும் பேசாமல் இருப்பதை எண்ணி விரல் வெட்கத்தை நிறுத்திவிட்டு துணிச்சலை துணைக்கழைத்து தலை நிமிர்ந்து மாமா மணியை பார்க்கிறாள், மணியின் முகமோ ரஞ்சிதத்தின் கருப்பு தாவணியை பார்த்து வெளிரிப் போய் இருக்க..., ஆவலுடன் காண வந்த மணியின் கண்களில் கோபம் தேங்குவதை கண்டு என்னாச்சு மாமா ஏ? மூஞ்சிய இப்பிடி வச்சிருக்க? என்று கேட்டு விட்டு அவளே மணியின் கையை பிடித்திழுத்து தன் அருகில் அமர வைக்கிறாள். ஆனாலும் மணியின் கோபம் குறையாமல் இருப்பதை கண்டு எதுக்கு கோவம்?, சற்று யோசித்து விடை கிட்டியது போல ....ம் நேத்து ஊங்கூட ஃபோனல பேசும் போது டே-ன்னு சொல்லலன்னு தானே? என்று ஒரு முறை அவனைப் பார்த்துவிட்டு கெஞ்சலாய். சொல்லு டா மாமாஎன்க. மணி அவளின் கருப்பு தாவணியை பார்த்து என்ன இது கருப்பு கலருல டிரஸ் போட்டு வந்திருக்க லவ்வர்ஸ் டே-க்குசொல்லிக் கொண்டே வெருப்போடு வேறு பக்கம் முகத்தை திரும்பிக்கொள்கிறான்.

நீ சொன்ன கலருல தானே போட்டு வந்திருக்கேன்ரஞ்சிதம் சொல்லி முடிப்பதற்குள் கோபமாக மணி குறுக்கிட்டு நா சொன்னேனா? என்று பக்கத்தில் இருந்த கருபண்ணசாமியை பார்த்து விட்டு கருப்புனா இந்த சாமிக்கே ஆகாதுன்னு சொல்வாங்க, நல்ல நாள்ல இதவேறப் போட்டு வந்து நிக்கர, நேத்து ஃபோன்ல என்ன சொன்னேன்?”. மணியின் சற்று தடித்த குரலை கேட்டு ரஞ்சிதம் முகம் வாடிப்போக, சற்று நேரம் கழித்து அவனுக்கு பதில் சொல்கிறாள், நீ நேத்து ஃபோனுல நீல நெறம்னா நிஜமான காதல்னும், பச்சை நெறம்னா ஊருக்கே ஒசந்த காதல்னும், அப்புறம் மஞ்ச கலருனா நம்ம மனசு ரண்டும் சேந்திருக்குன்னு சொன்ன என்று விக்கி திணறிக்கொண்டே தொடர்ந்தாள் சிவப்பு நெறத்துல உடுத்துனா சேந்து நாம வாழுவம்னு சொ..ன்..னா.. ” என்று மணியை பார்த்ததுமே சத்தம் குறைத்தாள். அதுல ஏதாவது ஒரு கலர உடுத்தி வரவேண்டியதுதானே? என்று மணி கேட்க,

இல்ல நீ சொன்ன எல்லா நெறத்தலயும் உடுத்துனா நாம ரொம்ப நாளைக்கு சேந்தே வாழுவோம்னு நெனச்சேன், அத்தனையும் உடனுக்குடனே மாத்தி, மாத்தி போட்டு வர நா சினிமாகாரியா இருந்தா பரவாயில்ல, அதான் நேத்து சாயங்காலமே நம்ம சாயக்கார மாரிமுத்து கிட்ட சொல்லி ஒவ்வொரு நெறத்தையும் சரி சமமா கலந்து என் தாவணியில சாயம்போட சொன்னேன் அதத்தான் உடுத்தி வந்திருக்கேன் என்று சொல்லி முடிக்க,

வெகுளிதனமான அவள் மனதில் வேர்விட்டிருக்கும் காதலின் ஆழத்தையும் அதன் ஊடாக தோன்றிய இந்த வேடிக்கை செய்கையினாலும் மெய் சிலிர்த்தவனாக, இக்கனிவான மெல்லிய காதலின் உள்ளூர மண்டியிருக்கும் அன்பை புரிந்து கொண்டவனாகவும், அடிமைப்பட்டு கிடந்த மனதில் புரட்சி கருத்துக்கள் புகுந்தது போல், கருப்பு மேலிருந்த வெருப்பை தூக்கி எரிந்தான் மணி. அரைகுறையாக தேர்வு எழுதிவிட்டு பட படப்புடன் தேர்வு முடிவுக்காய் தவிப்போடு காத்திருக்கும் மாணவியாக ரஞ்சிதம், மணியின் முகத்தை பார்த்துக்கொண்டு எதிரில் நின்றிருக்கிறாள். இவன் முகத்தின் மாற்றங்கள் புரியாமல்,

மணி செல்லமாக கண் சிமிட்டி ரஞ்சிதத்தை பார்த்து சிரித்து அவளை நெருங்க.. மக்கள் சர்வாதிகாரத்தால் பொதுவுடைமையை கைப்பற்றி செங்கொடி பறக்க விட்டதாய்.. மகிழ்ச்சி திளைப்பில் மிதந்தவள் இதுதான், சரியான தருணம் என்று தன் பரிசு பொருளான “லவ்பேட்ஸ்”-ஸை தருகிறாள் மணி அதை வாங்கியதும், லவ்பேட்ஸ்-சும் கருப்பாக இருப்பதாய் உணருகிறான், சட்டென மணி ரஞ்சிதத்தை கட்டியணைத்து உச்சி முகர, இயல்பை மறந்த இருவரும் மாற்று தேசத்திற்கு போய்க்கொண்டிருக்கிறார்கள், கருப்பு மெல்ல மெல்ல இவர்களுக்குள்ளே பரவத் தொடங்குகிறது...

------------------------------------------------

3 comments:

  1. super story da like it da love u so much

    ReplyDelete
  2. how can i read it.....
    wat language

    ReplyDelete
  3. very nice story da
    ivolo nal atha padika miss panniten da
    really
    i like it very much dear

    ReplyDelete