
உன் உதட்டு
வெடிப்பின் உள்
ஓரம் சாரத்தில்
ஒளிந்துகொண்டிருக்கிறது ,
சிவப்பு நிறம்
கலந்த
சீனியை திருடும்
என்
எச்சில் எறும்புகள் !
ஆண்:வழி தோழி நீதானா ?
விரல் தீண்டும் தீதானா? ( வழி தோழி)மனசுக்குள் மறுகினேன்
மொழி துப்பி சிதறினேன்
நீ பட்ட எதிரிலே
திசைமாறி பூக்கிறேன்
உனை கண்ட நிழலிலே
பெண்ணே
பிழையாகிறேன்
.......வழி தோழி நீதானா?...
பெண்: ஏனடா வதைக்கிறாய்
என் மேனியை சிதைக்கிறாய்
கேளடா மௌனத்தால்
உன் ரோமத்தில் சிலிர்த்ததை
தேகம் ஏதோ வலியிலே...
ஆண்: வழி தோழி ...
ஆண்: காதலி... தனியாவோம்
ஆதமின்... கனியாவோம்
மேகத்தில்... புதைகிறோம்
நிலவின்றி... ஒளிர்கிறோம்
மோகம் இதோ நதியிலே...
பெண்: வழி தோழன் நீதானே
விரல் பற்றும் தீதானே (வழி தோழன்)நெஞ்சுக்குள் நொறுங்கினேன்
மொழி இன்றி உளறினேன்
தீ சுட்ட இடத்திலே
தேனிட்டு பூசினேன்
உனை கண்ட நிஜத்திலே
அன்பே
சிலையாகிறேன்
வழி தோழன் நீதானே ....
ஆண்: பொன்னுமனம் வீசும் எங்கள்
கழனி வயலுதான் (பொன்னு)
நெஞ்சுக்குள்ளே
சுரக்கும்
ஒரு நேச வாசம் தான்
கையும் காலும்
மூலதனம்
களத்துமேடுல ...
எங்க
வாழ்வு இங்கே
மொளைக்குதம்மா
இந்த சேத்துல
பெண் குழு: ஓ..ஓ...ஓ..ஓ...
வரப்பு விட்டு
மேலவந்தா
வடக்கு தெருவுல
பெண்: வடக்கு தெருவுல
ஆண்: காரவீட்டு திண்ணமேல
காஞ்சு கெடக்குடா
பெண்:நெல்லு காஞ்சு கெடக்குடா
ஆண்: வெரப்ப மீறி
வெளிய தெரியும்
நாத்து பயறுதான் (2 )
கொத்தும்
குருவி,சிட்டு
எல்லாம் விசிலடிக்குதே
ஒத்தையடி பாத ஓரம்
புட்டுகடையில
சிங்கபல்லு மைனருதான்
சிரிச்சு நிப்பாரு
பெண்: ஒத்தையடி பாத ஓரம்
புட்டுகடையில
சிங்கபல்லு மைனருதான்
சிரிச்சு நிப்பாரு (பொன்னுமணம்)
பெண்: ஏறபூட்டி காள ஓட்டும்
ஆச மச்சானே
ஆச மச்சானே
எழந்த முள்ளு காட்டு ஓரம்
காத்து இருக்குமே
கஞ்சி காத்து இருக்குமே
ஆண்: அறுத்து போட்ட
கதிரு தெறிக்கும்
களத்துமேட்டுல (2 )
கட்டி தூக்கி ,சொமக்கும்
எங்க காஞ்ச உடம்புதான்
ஆண்: பொள்ளாச்சி சந்தைக்கு
பறந்து போவாரு
கட்ட வண்டி
மாடு பூட்டி ரட்ட பாதையில்
பெண்: பொள்ளாச்சி சந்தைக்கு
பறந்து போவாரு
கட்ட வண்டி
மாடு பூட்டி ரட்ட பாதையில் (பொன்னுமணம்)

வாகனம் வேண்டாமென
காலாற...
தட்டான் கரட்டோரம்
தடம் பாத்து
நா நடக்க
சரட்டான், ஓணானெல்லாம்
சமுக்காளம் தேடும்
குளிரப்போல
பதுங்கி தெறிக்க,
தொலைதூர
மாட்டு மணியோடு
கடையாணி சத்தம் கலந்து
தள்ளாடி
உருண்டு வர,
சாரி பணமரங்க
கை கோர்த்து
காஞ்ச ஓல மேல
காத்த தட்டி
வழி நெடுக
சலசலத்து வரவேற்க,
ஊரான் கெணத்து மேட்டு
உச்சி மர கிளை மேலே
ஜோடி கிளி ரெண்டுக
கொஞ்சி மகிழ,
என்ன கண்டு
சோளகொல்ல பொம்மையென
சொகத்தவிட்டு
பிரிஞ்சோட,
கருப்பு சாமி கோவில்
கல்லுகட்டில்
கூடு கட்டியிருந்த
கொசு தேனீ கூட்டமெல்லாம்
குய்யோ, முய்யோவென
கொலவ சத்தமிட,
வெங்கிழிச்சாங்கல்லு காட்டுல
வெள்ளாட்டு பட்டிகுள்ள ஆடுக
தட்டிய முட்டி தள்ளும்
முயற்சியில்
முண்டியடித்து
மொகம் காட்ட
என்ன
அடையாளம் கண்டழைக்க,
முன்ன தெருவுகுள்ள
இறங்கியதுமே
பிஞ்சு,பொடிசுகல்லாம்
பின் தொடர,
நலம் விசாரிப்புகளோடு
பெருசுகளும்,
அனைத்து சொந்தகளோடு
ஆடு,மாடு,காக்கா,குருவிகளும்...
“காரவீட்டு கூர மேல
காக்கா கத்துது
சொந்த சனம்
சோத்துக்கு வரும்போல
ஒல வைக்கும் போது
ஒரு பிடி சேத்து போடனும்” என
அஃறிணைகளோடு
அலவளாவும்
என்
அம்மா,
ஊரோடு நா வரும்
ஊர்வலத்த கண்டு
உச்சி குழுந்து
என்ன பாத்த
அந்த
உயிர் பார்வை
ஒன்னு போதும்
உதரி தள்ளிடுவேன்
இந்த
ஜில்லா கலெக்டர்
பதவியையும் கூட...

உதடுகளுக்கு இடையே
உயிரை வைத்துக் கொண்டு
என்னை
அடிக்கடி
கவலைக்கிடமாக்குகிறாய்.

எத்து பல்லு
சந்துக்குள்ளே
சிக்கி தொங்கும்
உன்
சிரிப்பை
அள்ளி எடுத்து
மல்லி நாத்தோடு கொஞ்சம்
தள்ளி நட்டு வைக்க
நாத்த புடுங்கி
நடுவதற்குள்ளே
பூத்து குழுங்குது
அடுக்கடுக்கா...