
நய்யாண்டி மேளக்
கோமாளி தமிழால,
கவுண்டச்சி வாய்
கொதப்பி,கொதப்பி
காரித்துப்பும்...
குஞ்சம் வச்ச
குதுர சவுக்க
பண்ணாரி சந்தயில
பணங்கொடுத்து
வாங்கிவந்து
பல்லக் கடிச்சிகிட்டு
பண்ணயாரு
நின்னிருப்பான்;
கால, கருக்கலுல
கண்ணு முளிச்சு
வேல அத்தனயும்
செஞ்சு முடுச்சு
கோழிக் கூப்பிடத்தான்
கொட சாயும்
எம்பொழப்பு;
ஆறு மாசத்துக்கு
ஒருதரம்
அம்மா மட்டும்
வந்தழுவும்...
கூடயே வரேன்னு
நா
அடம்பிடிச்சு
அவ கொசுவத்த
பிடிசிழுப்பேன்...
மிடுக்குச் சட்ட
பண்ணயாரு
முருக்கு மீசய
நீவி விட்டு
மொறச்சு நிப்பான்;
பழுக்கக் காச்சிய
கம்பிச் சுட்ட
கெண்டப் பாதத்
தழும்பு மேல,
பம்புசெட்டு போல வர
பயந்தடக்கி
பண்ணயாரு பாத்துருவானு,
ரண்டுச் சொட்டு
கண்ணீர மட்டும்
தழும்பி விட்டு
போகும் போது...
ஆறுதலா
அவ தரும்
முத்தத்த
அழுங்காம, குழுங்காம
அப்பிடியே
அரணாக்கயிறுல
முடிஞ்சி
அர வருசம்
வச்சிருப்பேன்.
No comments:
Post a Comment