
கதவுக்கும், நெளவுக்கும்
சண்டை மூட்டிவிடும்
காத்தோடக்
காதத் திருகி
இந்த
நாரத வேலைய
நறுக்குன்னு கிள்ளும் போது
கதவடைக்க வந்த
உன்ன கண்டு
வாயடைச்சு நிக்கிறேன் ;
காவேரியாத்துக் களிமண்ணுல,
கங்கையாத்து தண்ணிய
சேத்து செஞ்ச செலையாட்டம்
என்
நெஞ்சொடைச்சு போகுற...

நய்யாண்டி மேளக்
கோமாளி தமிழால,
கவுண்டச்சி வாய்
கொதப்பி,கொதப்பி
காரித்துப்பும்...
குஞ்சம் வச்ச
குதுர சவுக்க
பண்ணாரி சந்தயில
பணங்கொடுத்து
வாங்கிவந்து
பல்லக் கடிச்சிகிட்டு
பண்ணயாரு
நின்னிருப்பான்;
கால, கருக்கலுல
கண்ணு முளிச்சு
வேல அத்தனயும்
செஞ்சு முடுச்சு
கோழிக் கூப்பிடத்தான்
கொட சாயும்
எம்பொழப்பு;
ஆறு மாசத்துக்கு
ஒருதரம்
அம்மா மட்டும்
வந்தழுவும்...
கூடயே வரேன்னு
நா
அடம்பிடிச்சு
அவ கொசுவத்த
பிடிசிழுப்பேன்...
மிடுக்குச் சட்ட
பண்ணயாரு
முருக்கு மீசய
நீவி விட்டு
மொறச்சு நிப்பான்;
பழுக்கக் காச்சிய
கம்பிச் சுட்ட
கெண்டப் பாதத்
தழும்பு மேல,
பம்புசெட்டு போல வர
பயந்தடக்கி
பண்ணயாரு பாத்துருவானு,
ரண்டுச் சொட்டு
கண்ணீர மட்டும்
தழும்பி விட்டு
போகும் போது...
ஆறுதலா
அவ தரும்
முத்தத்த
அழுங்காம, குழுங்காம
அப்பிடியே
அரணாக்கயிறுல
முடிஞ்சி
அர வருசம்
வச்சிருப்பேன்.

என் முதல் கவிதை தொகுப்பான
விழியிடைக் காதல் நிவேதிதா புத்தக பூங்கா பதிப்பகம் மூலம் ஜனவரி 2011 ல் வெளிவர இருக்கிறது...
மகிவர்மனின் குட்டிக் கவிதைகள், ஒவ்வொன்றும் ஒருவித அழகு... பழகு பழகு என்று சொல்லும் சிறு சிறு குழந்தைகளைப் போல. வயதான அனுபவஸ்தர்களிடம் அறிவுக்குத் திருப்தி வரும்.
ஒருவருக்குக் கவிதை எழுத ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால், இந்தக் கவிதைகளைப் பொறுத்தவரை, அது பெண்ணாக அமைந்துவிட்டது. தவிர, ஆண்களை ஆட்டிவைக்கும் பேய்கள் பெண்கள். அவர்கள் இல்லாமல் எந்த ஆணுவும் அசைய முடியாது, காற்று இல்லாவிட்டால் மரங்கள் ஆடாது என்பது போல.
சுருக்கமாகச் சொன்னால் ஆதிசக்தி பெண். அவள் பெற்ற பிள்ளைதான் ஆண். அவள் மண்டை உச்சியில் ஏறி உட்கார்ந்துகொண்டு எழுது எழுது என்று சொல்கிறபோது, யாரால்தான் அதைத் தட்ட முடியும்?
சைக்கிளில்
நாம் ஊர் சுற்றலாம் என
முடிவெடுத்த பின்
கழட்டி வைத்தேன்
பின் இருக்கையை..
மென்மையான மனசு, ஒரு கவிஞருக்கான பெரிய தகுதி . அது இவரிடம் தூக்கலாகவே இருப்பதும் நல்ல விஷயம்தான்.
அன்பே,
என் கவிதைகள்
எல்லாம் எனக்கானதல்ல
நெசவாளி நெய்யும்
ஆடையைப் போல...
என்பதும் இந்தத் தொகுப்பில் வரும் ஓர் அழகான கற்பனை.
இப்படி, கவிதை இறுக்கமாக இவரது கைவிரல் பற்றி அழைக்கிறது.
இன்னும் நெடுந்தூரம் இவரை அது கொண்டுசெல்லும் என்று நான் நம்புகிறேன். அப்போது நாமும் இவரது விரல் பற்றிக்கொண்டு அங்கெல்லாம் சென்று வரலாம்.
நன்றிகள் என்றென்றும் காற்றில்..!
அன்புடன்
அண்ணாமலை
பாடலாசிரியர்